Sunday, April 23, 2006

தருணங்கள்



எனக்கு முதுகு காட்டியபடி நடக்கிறவன்...
அது நீயாகத்தான் இருக்க வேண்டும்!
வேகமாக ஓடிவந்து தொடும் என்னை
வினோதமாகப் பார்த்துக் கொண்டே
விலகுகிறான் அந்த இளைஞன்!

உன்னுடனான நிறைய சந்தோஷங்கள்
இன்னமும் நினைவிருக்கின்றன,
ஒரேயொரு கவலை தான்...
மூளைக்குள் உன் முகம்
முற்றிலுமழிந்து பெயர் மட்டுமே
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கடைசியாக நாம் பேசிப்பிரிந்த
அந்த மாலைப் பொழுதில்,
நான் உன்னை இன்னும் கொஞ்சம்
உற்று நோக்கியிருக்க வேண்டும்

Categories:


Tell-a-Friend©

Wednesday, April 19, 2006

இயல்பு



பைக் கண்ணாடியை
குருவி கொத்துகிறது
இன்னும் கடினமாக உழை
டிஜிட்டல் கேமரா வாங்க

Categories: ,


Tell-a-Friend©

Saturday, April 15, 2006

காதலில்

உன் முத்தங்களை நிரப்ப என் கன்னக்குழி
உனக்குப் போதுமானதாயிருந்தது
ஒரு குழந்தையுடனானதை
ஒத்திருந்தது உன் ஸ்னேகம்
கவிஞனின் கண்களுக்கு கிடைத்த மஞ்சள் நிலவைப்போல
என் காதல் சரியாக உன்னிடம் சேர்ந்திருக்கிறது
துருப்பிடித்த இரும்பின் மரப்பலகை முத்தங்களாய்
காமத்தைப் பதிக்கிறாய்
ஏழைத்தாயின் அழுக்குச்சேலை தான்
அக்குழந்தைக்கு அற்புத வாசம்
ரயில் பயணத்து அதிர்வுகள் போல - உன்
சிறு குறைகளும் எனக்கு சுகம் தான்

Categories:


Tell-a-Friend©

Friday, April 14, 2006

இலக்கணம்


எல்லோரிடமும் சொல்லியிருந்தேன்
கல்லூரியில் படித்த போது
எனக்கொரு தோழி இருந்தாள்
என்னை ஊக்குவித்த தேவதை
தோல்விகளில் கை கொடுத்தவள்
முயற்சிகளுக்கு உருவம் கொடுத்தவள்
நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தவள்
அந்த நல்ல நாளில் அறிமுகப்படுத்தினேன்
எல்லோர் முகத்திலும் ஏமாற்றம்
அப்புறம் தான் புரிந்தது...
அவர்களைப் பொறுத்தவரை,

'தேவதை என்பவள்
அழகாக இருப்பாள்!'

Categories:


Tell-a-Friend©

Thursday, April 13, 2006

அய்யகோ


நல்லவேளை...
கம்பன் காலத்தில்
கட்சிகள் இல்லை
இருந்திருந்தால் சீதையை
'செப்பு முலையுடையாள்' என்றதற்காக
ராமாயணமே 'ரிலீஸ்' ஆகியிருக்காது

Categories:


Tell-a-Friend©

Wednesday, April 12, 2006

தடுமாற்றம்


'சட்'டென்று மாறுகிறது...
இயல்பின் நிறம்!
ஏதோ ஒரு ஏலியன்
கற்றுத்தந்ததோ...
காமம்?

Categories:


Tell-a-Friend©

Sunday, April 09, 2006

முகமூடி


சம்பிரதாயத்துக்காக வைத்த பட்டாசு
வெடிக்குமா வெடிக்காதா என
பயத்தோடு எதிர்நோக்கும்போது
மெதுவாக எட்டிப்பார்க்கும்
எப்போதோ கை விடப்பட்ட
குழந்தைத்தனம்

Categories:


Tell-a-Friend©

Thursday, April 06, 2006

கையறு நிலை


அப்போதெல்லாம்
என் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு முத்தம் பரிசாய்த் தருவாள்...என் காதலி

இப்போது...
எதேச்சையான சந்திப்பில்
ஸ்நேகமாய் சிரிக்கிறான்
அவள் கணவன்

சம்பிரதாயப்பேச்சுகளுக்கு பிறகு
மெதுவாய்க் கேட்டேன்...
"உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா?"

Categories:


Tell-a-Friend©

Tuesday, April 04, 2006

புதிர்


சூடாக என் மேல் விழும்
வெப்பக் காற்றை
குளிர்ச்சியான உன் பேச்சு
சமன் செய்து கொண்டிருந்தது

தூரத்து மணல் மேட்டில்
சிறுவர்கள் குதிப்பதாய்
கடல் நீர் மௌனத்தை
உடைத்துக்கொன்டிருந்தார்கள்

உன் கண்களும்-அந்தக்
கடலைப்போலவே
ஆழமாய்...அழகாய்...

எனக்கும் குதிக்க ஆசைதான்
என்ன செய்வது?
அவர்களைப் போல் எனக்கு
ஆழம் தெரியாதே...

Categories:


Tell-a-Friend©

Monday, April 03, 2006

மறதியின் நினைவுகள்



முகவரி மறக்கப்பட்டதொரு பாடலோடே
இதயத்தை அதிர்வுக்குள்ளாக்கும்...
ஏன் எதற்கென்றே தெரியாமல்
ஆரம்பித்து அவசரமாக முடிக்கப்பட்டதொரு
பழைய காதலின் சொச்சம்

கதறுதலுமில்லாது உதறுதலுமியலாது
உறுத்தும் வலி மாற்றப்படும்...
தற்காலிகமாக வேறு சேனலுக்கு

குடும்பமே அதிசயமாய்ப் பார்த்த
குட்டியைத் தாடையால் கவ்வி
அரவணைத்துப் போய்க்கொண்டிருந்த
அம்மிருகத்தைப் பார்க்கையில் தோன்றியது...
"அது நான் தானோ"


Categories:


Tell-a-Friend©

Sunday, April 02, 2006

தேவதையல்ல


நீ தூசி விழுந்ததில்
கண் கலங்கிய போது தெளிந்தேன்...
"மனுஷி தான்"

Categories:


Tell-a-Friend©

Saturday, April 01, 2006

பரிச்சயம்



உன்னைப் பிரிந்த
மறு நாள் விடியலில் கூட,
படுக்கையில் நீ
சிரித்தது போலொரு பிரமை

பிரிவிற்கான காரணங்களை யோசிப்பதை
இப்போதும் தவிர்க்கிறேன்,
அவை விஸ்வரூபமெடுத்து
எனைக் கொல்லாதிருக்க...

ஜன்னலின் வழி உலகம் வெறிக்கும்
என்னை நோக்கி திரும்பிப்படுத்து
அதிகாலை குளிருக்கும் இன்ன பிற சுகங்களுக்குமாகத்துளிர்க்கும்
விலைமகளின் இதழோரப்புன்னகையில்
சில நொடிகள் அறையின் வெளிச்சத்தைக் கூட்டுகிறது...
உன் காதல்

Categories: ,


Tell-a-Friend©