Friday, March 31, 2006

மவுனம்


கதவு மூடியிருக்கிறது
நீயறிவாய்...வெளியே தான் நான் நிற்கிறேன்
உள்ளே தான் நீயிருக்கிறாய்...நானறிவேன்

பரிசோ, தண்டனையோ
பகிர ஏதோ ஒன்று
இருவரிடமுமே இருக்கிறது

நீ தட்டக் கூட வேண்டாம்
தட்ட வேண்டுமென நினைத்தாலே போதும்
கதவு திறந்து கொள்ளும்
பயமோ பரிதவிப்போ
நீ அமைதியாகவே இருக்கிறாய்
இன்னமும்...

கதவு மூடியே இருக்கிறது

Categories:


Tell-a-Friend©

Thursday, March 30, 2006

சுயம்


உனக்கு அடங்குவது மிகப் பிடித்திருந்தது
காதலின் இனிமையில் நானும் விரும்பினேன்...
பின்னாளில் நீ சலித்து விலகுவாய் என எண்ணி!

ஒரு தூதுவன் பறந்து வந்து
என் கழுத்தில்
ஏதோ எழுதப்பட்ட
ஒரு அட்டையை தொங்க விட்டான்
சுற்றி இருந்தவர்கள் பெருங்குரலோடு
சிரித்து கை தட்டினார்கள்
எதற்கென அறியாமல் நானும்...

Categories: ,


Tell-a-Friend©

காதலம்


கண்ணாடி என்பதற்கு
அர்த்தம் கேட்டாய்
கண்கள் என்றேன் - மறுத்துவிட்டு
கவிதை என்றாய்

பூக்களுக்கு வேறு பெயர் கேட்டாய்
உன் புன்னகை என்றேன்
பொய்யென்று தலையாட்டி - புல்லின்மேல்
பனித்துளி என்றாய்

வெட்கத்திற்கு எதிர்ச்சொல் கேட்டாய்
நீ என்றேன்...
அடித்துவிட்டாய்!

முத்ததிற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...தெரியாது என்றேன்
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய் கேட்டாய்...
"கற்றுத்தரவா?" என்று

Categories:


Tell-a-Friend©

எதிர்ப்பதம்


எனக்குப் பிடிக்கவில்லை...
வியர்வை வாடையோடு
மாற்றாத உடைகளினுள்
குளிக்காத உடல்கள்

ரயிலின் ஒவ்வொரு அதிர்விலும்
நெருக்கமாகும் எனக்கும் சேர்த்து
கழுத்து வரை அவள் போர்த்துவது கூட
துவைக்காத போர்வை தான்

அந்தக் குளிரான இரவில்
காதலின் உரிமையோடு
உச்சந்தலை திருப்பி - அவள்
காட்டிய திசையிலிருந்தது
எங்களைப் போலவே...
அந்த அழுக்கு நிலா

Categories:


Tell-a-Friend©