Sunday, June 11, 2006

தொலை(ந்து போன)காட்சியோடு


முகவரி மறக்கப்பட்டதொரு பாடலோடே
இதயத்தை அதிர்வுக்குள்ளாக்கும்...
ஏன் எதற்கென்றே தெரியாமல் ஆரம்பித்து
அவசரமாக முடிக்கப்பட்டதொரு பழைய காதலின் சொச்சம்

கதறுதலுமில்லாது உதறுதலுமியலாது
உறுத்தும் வலி மாற்றப்படும்...
தற்காலிகமாக வேறு சேனலுக்கு

குடும்பமே அதிசயமாய்ப் பார்த்த
குட்டியைத் தாடையால் கவ்வி
அரவணைத்துப் போய்க்கொண்டிருந்த
அம்மிருகத்தைப் பார்க்கையில் தோன்றியது...
"அது நான் தானோ"

Categories:


Tell-a-Friend©

Thursday, June 08, 2006

sweet nothings



கண்ணாடி என்பதற்கு
அர்த்தம் கேட்டாய்
கண்கள் என்றேன் - மறுத்து விட்டு
கவிதை என்றாய்

பூக்களுக்கு வேறு பெயர் கேட்டாய்
உன் புன்னகை என்றேன்
தவறென்று தலையாட்டி - புல்லின் மேல்
பனித்துளி என்றாய்

வெட்கத்திற்கு எதிர்ச்சொல் கேட்டாய்
நீ என்றேன்...
அடித்து விட்டாய்!

முத்தத்திற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...?
தெரியாது என்றேன்!
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய்க் கேட்டாய்...
"கற்றுத் தரவா?" என்று.

Categories:


Tell-a-Friend©

Wednesday, June 07, 2006

பேசக்கூடாது...


"நீ என் உயிர்த்தோழி" என்றேன்,
"மன்னியுங்கள்; உண்மையில்
எனக்கு உங்களை நினைவில்லை" என்றாய்

"நீ இல்லையேல்
நான் இறந்திடுவேன்" என்றேன்,
"மன்னியுங்கள்;முன் பின் அறிமுகமில்லாதவருக்கு
நான் உதவுவதில்லை" என்றாய்

"எனில் உனை இம்சிப்பதாய்
எனை தண்டிக்க வேண்டியது தானே" என்றேன்
ஓரக்கண்ணால் பார்த்து-குறும்பாய்
ஓருதட்டை சுழித்துச் சொன்னாய்:

"உனை தண்டித்திடலாம்;
நானெப்படி வலி பொறுப்பதாம்?"

Categories: ,


Tell-a-Friend©

Sunday, June 04, 2006

ஊடல்


தெரு விளக்கிலிருந்து
வெளிச்சம் கடன் வாங்கும் மழை…
மழையில் குளிக்கின்ற
ஜன்னல் கம்பி…
கம்பியிலிருந்து தெறித்து – உன்
பாதம் நனைத்து மோட்சமடையும்
அமிழ்தத் துளி
அதனாலோ…எதனாலோ…
நீ கண் விழித்த போது – அந்தக்
குளிருக்கு சரியாகப் பொருந்தும்படிக்கு
என் மார்பின் மீதர்ந்திருந்த சூடான் உன் கைகள்,
என்னிடம் கிசுகிசுத்தன…

சிறிது நேரம் ஊடலைக் கைவிடுமாறு!

Categories:


Tell-a-Friend©

Friday, June 02, 2006

சொல்லி விடு...நலம்


புகைப்படத்தில் மட்டும்
புன்னகையை வெளிப்படுத்துகிற
சராசரி முகமில்லை...
உன்னுடையது

பூட்டிய கடைகளுக்குள்
சாதாரணமாய் நுழைந்து விடும்
திருட்டுப்பூனை போல - அழகாக
மனதிற்குள் நுழைந்து விடுகிறாய்

ஒரேயொரு விண்ணப்பம்...
காதலிப்பதானால் சொல்லி விடு
என்னைப்போல் - கவிதையெல்லாம்
எழுதிக்கொண்டிருக்காதே

Categories:


Tell-a-Friend©